பன்னிரெண்டாயிரம் ஆட்டோகிராப்
உலகமே வியந்து பாராட்டிய ஹாரிபாட்டர் நாவலை உருவாக்கியவர் ஜே.கே.ரௌலிங். மாயாஜால கதையான ஹாரிபாட்டரின் ஒவ்வொரு பாகமும் வெளியாகும் தேதியை, உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருப்பார்கள். புத்தகத்தை வாங்குவதற்காக, கடைகள் திறப்பதற்கு முன்பே பல மீட்டர் நீளத்துக்கு வரிசையில் காத்திருப்பார்கள். இவ்வாறு, விற்பனையில் பல சாதனைகளை படைத்தது ஹாரிபாட்டர் நாவல். புத்தகமாக வெளிவந்தது மட்டுமில்லாமல், சினிமாவாகவும் பல பாகங்கள் வெளிவந்து வசூலை அள்ளியது.
ஒரு எழுத்தாளர், ஒரு நாளில் பன்னிரெண்டாயிரம் பேருக்கு ஆட்டோகிராப் போட்டார் என்றால் நம்ப முடிகிறதா? அந்த சாதனைக்கு சொந்தக்காரர், பெண் எழுத்தாளர் ஜே.கே.ரௌலிங். தனது எழுத்தின் மூலம் பல கோடி வருமானத்தை பெற்ற ரௌலிங், ஒரு காலத்தில் கணவனை பிரிந்து, கைக்குழந்தையுடன் வறுமையால் வாடியவர்.
1956-ம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் இங்கிலாந்தில் பிறந்த ரௌலிங்கிற்கு, சிறு வயதிலே கதை எழுதுவது மிகவும் பிடிக்கும். அப்போது அவர் மனதில் தோன்றிய கதைதான் ஹாரிபாட்டர். பெற்றோரின் வற்புறுத்தலால் படிப்பில் கவனம் செலுத்திய ரௌலிங், ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
பிறகு ஒரு வழியாக நாவலை எழுத ஆரம்பித்தார். மூன்றாவது பாகம் எழுதும்போதே, வேலைக்காக போர்ச்சுக்கல் நாடு சென்றார். அங்கே காதல் திருமணம், குழந்தை பிறப்பு, விவாகரத்து என அடுத்த மூன்றே ஆண்டுகளில், ஒவ்வொன்றாக நடந்து முடிந்தது.
வாழ்க்கையே வெறுத்து போன நிலையில், மீண்டும் லண்டனுக்கு குழந்தையுடன் வந்தார். அதே நேரம் ஹாரிபாட்டரின் மூன்று அத்தியாயங்கள், நான்கு ஆண்டுகளாக அவரது பெட்டியில் உறங்கி கொண்டிருந்தன. லண்டனில் வேலையும் இல்லாமல், தங்குவதற்கு இடமும் இல்லாமல் தவித்தார் ரௌலிங்.
அமர்ந்து எழுதுவதற்கு சரியான இடம் தேடி அலைந்தார். அந்த ஊரில் இருந்த காபி ஷாப்பில், உட்கார்ந்து எழுத இடம் கொடுத்தார்கள். அங்கே நேரம் கிடைக்கும்போதெல்லாம், உலகத்தை மறந்து ஹாரிபாட்டர் கதையை எழுதினார். எழுதிய கதையை எடுத்து கொண்டு பல பதிப்பகங்கள் ஏறி, இறங்கினார். எல்லா இடத்திலும் புறக்கணிப்பே பதிலாக கிடைத்தது. இருந்தாலும் ஒரு நாள் நிலைமை மாறும் என்று நம்பினார். ரௌலிங்கின் நம்பிக்கை வீணாகவில்லை.
ப்ளுபெர்ரி என்ற பதிப்பகம், அவரது கதையை புத்தகமாக வெளியிட முன்வந்தது. ஹாரிபாட்டர் முதல் புத்தகம் 1997-ம் ஆண்டு, ஜூன் 26-ந் தேதி வெளியானது. விற்பனையில் கொடிகட்டி பறந்தது. ஒரே நாளில் பன்னிரெண்டாயிரம் புத்தகங்களில் கையெழுத்து போட்டு கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தார் ரௌலிங்.
இதுவரை, ஹாரிபாட்டரின் ஏழு பாகங்கள் வெளிவந்துள்ளன. அத்தனையும் விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
Comments
Post a Comment